Wednesday, 2 October 2013

எனக்கு இது செல்லாக்காசு... அதை மக்களுக்குச் செலவழிக்கிறேன்! 'ஆயிரம் கோடி' ஆறுமுகச்சாமி அதிரடிப் பேட்டி!


ரசு நிறுவனம் துவங்கி கோவில் உண்டியல் பணம் வரை பல இடங்களில் கொள்ளை அடிக்கும் அர்ஜூன், மாணவர்களுக்கு கல்வி உதவிகளை வாரி வழங்குவார். மக்கள் கல்வி மையம் எனும் இலவச கல்வி மையத்தை துவங்குவார். இது ஜென்டில்மேன் படத்தின் கதை. நிஜத்தில் இப்படியெல்லாம் நடக்குமா என நம் எண்ணுவதை கிட்டத்தட்ட நிகழ்த்தி காட்டுகிறார் ஆறுமுகசாமி. ஆனால் இவர் கொள்ளை அடிப்பதாக கூறப்படுவது தமிழகத்தின் தாய் மடியாக கருதப்படும் ஆற்று மணல் என்பது தான் வேதனை. 
மணல் தொழிலில் போட்டியே இல்லாத மோனோபலியாக கொள்ளை லாபம் சம்பாதித்து வருவதாக அறியப்பட்டு வரும் ஆறுமுகசாமி, மணல் மூலம் கிடைக்கும் லாபத்தில் இந்தாண்டு மட்டும் வழங்க உள்ள கல்வி உதவித்தொகை மட்டும் ரூ.140 கோடிக்கும் மேல். 
“மணலில் கிடைத்த பணத்தின் ஒரு பகுதி, எனது மனைவி பெயரிலான விஜயலட்சுமி அறக்கட்டளையில் சேர்க்கப்பட்டு வருகிறது. அறக்கட்டளையின் தற்போதைய சொத்து மதிப்பு ரூ.1,250 கோடிக்கும் அதிகம். ஆண்டுக்கு சராசரியாக மணல் தொழில் மூலம் ரூ.100 கோடி அறக்கட்டளைக்கு சேர்க்கப்பட்டு வருகிறது,” என வெளிப்படையாகவே ஆறுமுகசாமி கூறும் அளவுக்கு இந்த தொழிலில் கொட்டுகிறது பணம். 
மணலில் கிடைக்கும் லாபத்தின் ஒரு பகுதியே இவ்வளவு என்றால், அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள், ஆறுமுகசாமியின் பங்கு(?)தாரர்கள் போன்றவர்களுக்கு சேரும் பணம் எல்லாம் சேர்த்தால்...மொத்த லாபம் எவ்வளவாக இருக்கும்? 
‘இயற்கை வளங்களை அநியாயமாக கொள்ளையடிப்பதால், நீர் மட்டம் குறைகிறது. சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது ஆற்றுப் படுகைகளில் அளவுக்கு அதிகமாக மணலைச் சுரண்டுவது, தாயின் மடியை அறுத்து பால் குடிப்பதற்கு சமமானது.’ என்றெல்லாம், பல ஆண்டுகளாக சூழல் ஆர்வலர்கள் சொல்லி வந்தாலும், மணல் கொள்ளை மட்டும் தடுக்கப்படவே இல்லை. நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கும், சுற்றுச்சூழல் சீர்கெடும் என்பதெல்லாம் அரசுக்கே தெரிந்தாலும், யாரும் இதை கண்டுகொள்ளவில்லை. இதனால் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், ஆற்று மணலை பொறுத்தவரை ஆறுமுகசாமியின் ஆட்சி தான்.
“தமிழகத்தில் மணல் கொள்ளையை இரும்புக்கரம் கொண்டு அடக்குவேன் எனக் கூறும் ஜெயலலிதாவுக்கு, கோவை ஆறுமுகசாமி, தமிழகம் முழுவதும் மணல் கொள்ளையில் ஈடுபடுவது தெரியாதா?,” என கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு பின் அதிமுகவுடனான உறவை முறித்துக்கொண்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த், பகிரங்கமாக கேள்வி எழுப்பினார். இன்று வரை விஜயகாந்தின் கேள்விக்கு  ஜெயலலிதா பதில் சொல்லவில்லை. 
அதேபோல் ஜெயலலிதாவை பற்றி யாராவது விமர்சித்தால் உடன் சேர்ந்து விமர்சிக்கும் கருணாநிதியும், விஜயகாந்த் கேட்ட இந்த கேள்வியை இதுவரை திருப்பிக் கேட்கவில்லை. அந்த அளவுக்கு திமுக, அதிமுகவில் அதிகாரம் படைத்தவராக இருக்கிறார் கோவை ஆறுமுகசாமி. தமிழகத்தில் ஆள்வது யாராக இருந்தாலும் இவரது செல்வாக்கு மட்டும் குறையாது. கடந்த 23 ஆண்டுகளாக மணல் தொழிலில், பெரு வியாபாரம் செய்யும் முதலாளியாக பரவலாக அறியப்பட்டு வருகிறார் இவர். 
மதுரையில் கிரானைட் தொழிலில் ஈடுபட்டு பெரு லாபம் சம்பாதித்து வந்த பி.ஆர்.பழனிச்சாமி, தென் தமிழகத்தில் கார்னெட் மணல் விற்பனை மூலம் பெருமளவு லாபம் ஈட்டிய வைகுண்டராஜன், தமிழகம் முழுவதும் ஆற்றுப் படுகைகளில், பொக்லைன் எந்திரம் வைத்து மணல் அள்ளி வியாபாரம் செய்பவராக கூறப்படும் கோவை ஆறுமுகசாமி ஆகியோர் அரசு கஜானாக்களுக்கு செல்லவேண்டியதை தங்களது லாபமாக அள்ளிக்கொண்டனர் என ஒரு பேச்சு நீண்ட காலமாக உண்டு. 
இந்த மூவரில் கிரானைட் பி.ஆர். பழனிச்சாமி மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு விட்டது. கார்னெட் மணல் விவகாரம் தொடர்பாக விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஆறுமுகசாமி மட்டும் எந்த நிர்பந்தமும் இல்லாமல் ஹாயாக இருக்கிறார். “நான் கடந்த 23 ஆண்டுகளாக மணல் வியாபாரத்தில் தொடர்பில் இருந்தாலும், மணலுக்கும் எனக்கும் ஆவணமாக எந்த தொடர்பும் இதுவரை இல்லை. பெரு முதலீட்டாளராக இந்த தொழிலில் இருக்கிறேன். ஆனால் என் பெயரில் எதுவும் இல்லை” என வெளிப்படையாகவே சொல்லி வரும் கோவை ஆறுமுகசாமி நிர்வகிக்கும் விஜயலட்சுமி அறக்கட்டளையின் சொத்து ரூ. 1,250 கோடிக்கும் அதிகம்.
1996ம் ஆண்டு திமுக ஆட்சிக்காலத்தில் விதிமீறி மணல் எடுத்ததாக கூறி, இவர் சார்ந்த நிறுவனத்துக்கு பல கோடி அபராதம் விதிக்கப்பட்டதாம். வருவாய் அதிகாரிகள் வந்து விசாரித்தனர். ஆவணங்களை சரிபார்த்தனர். அப்போது தான் அவர்களுக்கு தெரிந்தது, ஆறுமுகசாமிக்கும் மணல் தொழிலுக்கும் ஆவண ரீதியாக எந்த தொடர்பும் இல்லை. அவரது டிரைவர் தான் கான்ட்ராக்டராக இருந்திருக்கிறார். அதிகாரிகள் திரும்ப சென்று விட்டனர். இந்த 23 ஆண்டுகளில் இப்படித்தான் தொழில் நடத்தி வருகிறார் இவர். யார் இந்த ஆறுமுகசாமி?
கோவை, மாவட்டம் அன்னூர் அருகே உள்ள குக்கிராமத்தில் எளிய விவசாய குடும்பத்தில் பிறந்த இவர், படித்தது எஸ்.எஸ்.எல்.சி. வரை தான். அதிலும் தேர்ச்சி பெறவில்லை. திமுகவில் இருந்த இவர், தனது 22வது வயதில், குப்பனூர் ஊராட்சி தலைவரானார். 1977ம் ஆண்டு மேட்டுப்பாளையம் தொகுதியில் திமுக சார்பில் எம்.எல்.ஏ.வுக்கு போட்டியிட்ட ஆறுமுகசாமியால் 4வது இடத்தையே பிடிக்க முடிந்தது. அதற்கு பின்னால் 1989ம் ஆண்டு வரை திமுகவில் இருந்த அவர், திமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
இதற்கு பின்னர் 1990ம் ஆண்டு மணல் தொழிலில் கால் பதிக்கிறார். ஏலம் எடுத்து மணல் விற்பனை செய்ய துவங்கிய ஆறுமுகசாமி, 2003ம் ஆண்டுக்கு பின்னர் உச்சத்தை எட்ட துவங்கினார். 2003ம் ஆண்டு வரை தனியாருக்கு ஏலம் விடப்பட்ட மணல் குவாரிகளை அதன் பின்னர் அரசே ஏற்று நடத்தியது. 
“கட்டட கட்டுமானப் பணியின் எல்லா மட்டத்திலும் மணல் தேவைப்படுகிறது. மணல் இல்லையேல் கட்டுமானப் பணிகள் இல்லை. எனவே மணல் குவாரி என்பது ஒரு தங்கச் சுரங்கம்” என்பதை ஜெயலலிதாவுக்கு சொன்னவரே இவர் தான் என்றும் ஒரு பேச்சு உண்டு. பொதுப்பணித்துறை மூலம் அரசே மணல் குவாரிகளை நடத்தினாலும், மணலை அள்ளி லாரிகளில் ஏற்றும் 'லிப்டிங் அண்ட் லோடிங் கான்ட்ராக்டை’ ஆறுமுகசாமியிடம் வழங்கப்பட்டது. 
2006ம் ஆண்டு அடுத்து திமுக ஆட்சிக்கு வந்ததும் வேறு சிலரிடம் இந்த கான்ட்ராக்ட் கொடுக்கப்பட்டது. ஆனால் அது சரிவரவில்லை. யாரிடம் இந்த பணியை ஒப்படைப்பது என ஆலோசித்தபோது, ‘அட ஆறுமுகசாமியையே கூப்பிடுங்கப்பா. அது தான் பேர்லயே ஆறு வைச்சிருக்காரே,’ என கருணாநிதியே அழைத்து ஆறுமுகசாமியிடம் கான்ட்ராக்ட் வழங்கப்பட்டது. இன்று வரை கோவை ஆறுமுகசாமியின் கண் அசைவில் தமிழகம் முழுவதும் மணல் தொழில் நடக்கிறது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் வேடிக்கை தான் பார்க்கிறார்கள். 
இப்படி மணல் மூலம் பெரும் தொகை சம்பாதித்து வரும் ஆறுமுகசாமி, தற்போது கல்வி உதவி தொகைகளை வாரி வழங்கி வருகிறார். அரசு பள்ளிகளில் 80 சதவீதம், தனியார் பள்ளியில் 90 சதவீதம் மதிப்பெண் பெற்றால் யார் என்ன என கேட்காமல் கல்வி உதவி என ஒரு தொகையை கொடுக்கிறார். இதுவரை 3 லட்சம் பேருக்கு ரூ.300 கோடி வரை உதவித்தொகை வழங்கியிருப்பதாக சொல்கிறார் இவர். 
இதில் மிக பெரும்பாலோனோர் காரில் வந்து உதவித்தொகைகளை வாங்கிச்சென்றவர்கள் தான். இதை ஆறுமுகசாமியும் ஒப்புக்கொள்ளவே செய்கிறார். “கல்வி உதவித்தொகை பெருபவர்களில் 25 சதவீதம் பேர் தான் உண்மையில் பயனடையராங்க. மத்தவங்களெல்லாம் வசதியானவங்க தான். என்ன செய்யறது. கேட்டவங்களுக்கெல்லாம் கொடுக்கறேன்,” என விளக்கம் கொடுக்கிறார் அவர்.
இலவச பள்ளியை நடத்தி வருகிறார். குளம் தூர்வார நிதி கோடிக்கணக்கில் கொடுக்கிறார். அரசு மருத்துவமனைக்கு உதவுகிறார். இதன் மூலம் மணல் கொள்ளையில் அடிபடும் தன் பெயரை மாற்ற நினைக்கிறார் 71 வயதை கடக்க உள்ள ஆறுமுகசாமி. ஆனால் இன்னும் ஆற்று மணல் எடுக்கும் தொழிலை கைவிட்டு விடவில்லை. சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் மணல் எடுக்க தடை விதிக்க வேண்டும் என பசுமை தீர்ப்பாயம் கடுமையாக கூறிய பின்னரும் அதைப்பற்றி கவலை கொள்ளாமல், இயற்கை வளங்களை சிதைத்து  மணல் எடுப்பது தொடர்ந்து வருகிறது. தன்னை சார்ந்தவர்கள் மூலம் ஆற்று மணல் தொழிலை எந்த தொய்வுமின்றி, முன்னரை விட வேகமாக நடத்தி வருகிறார் ஆறுமுகசாமி.
மேடை மேடையாக மணல் மாபியா என வர்ணிக்கப்பட்ட ஆறுமுகசாமி, இப்போது கல்வி தந்தை என புகழப்படுகிறார். முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் முன்னிலையில் கவுரவிக்கபடுகிறார். கொடை வள்ளல் என போற்றப்படுகிறார். ஒரு வேளை இதை நோக்கி தான் எல்லாம் செய்தாரோ என்னவோ?.
தமிழக ஆற்றுப் படுகைகளில் மணல் ஒட்டுமொத்தமாக சுரண்டி கொள்ளையடிக்கப்படுவதால் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்து யாரும் தெரிந்துகொள்ளவில்லை. ஏற்கனவே ஆறுகளில் நீர் இல்லாமல் போய்விட்டது. மழைநீரை உள்வாங்கி நிலத்தடி நீராக சேமித்துத் தரும் மணலும் இல்லையென்றால் எதிர்காலத்தில் தமிழகம் பாலைவனமாகிவிடும் என்பதை யாரும் உணர்ந்தபாடில்லை. அடுத்த தலைமுறைக்கு கரன்சிகளை விட உயிர்வாழ அவசியமான நீர்வளப்படுகைகளை பாதுகாத்து வைக்க வேண்டியது அவசியம் என்பதை நாம் இன்னும் உணர்ந்த பாடில்லை. 
“நான் கிராமத்தில் வளர்ந்தவன் பொதுச்சொத்து என்பது குலநாசம் என்பதை அறிந்தவன். பொது சொத்து பொதுமக்களுக்கே போய் சேரவேண்டும் என்பதற்காகத்தான் இந்த உதவிகளை செய்து வருகிறேன்” என உதவிகளுக்கு விளக்கம் கொடுக்கிறார் ஆறுமுகசாமி. ஆற்று மணலை விதிமீறி அள்ளுவது தலைமுறையையே நாசம் செய்துவிடும் என்பதை இவருக்கு எப்படி புரிய வைக்க...?
ஆறுமுகச்சாமியிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.
''மணல் தொழிலுக்கு எப்படி வந்தீங்க?''
''கோவை மாவட்டம், அன்னூர் அருகே உள்ள குக்கிராமத்தில் பிறந்தேன். ஊராட்சி தலைவரா இருந்தேன். சட்டமன்றத் தேர்தலில்கூட போட் டியிட்டேன். அதுக்கு அப்புறம் குழந்தைங்க படிப்புக்காக கோவை வந்தேன். முதல்ல திரைப்பட விநியோக வேலைகளை செஞ்சேன். அது சரியா வரலை. அப்புறம் வெடிமருந்து வியாபாரம் செஞ்சேன். அப்போ எங்க வீட்டுல கொஞ்சம் கட்டுமான வேலை நடந்துட்டு இருந்துச்சு. அதுக்கு மணல் வாங்குறப்போ நாளுக்கு ஒரு விலை சொன்னாங்க.  அதுல முதலீடு செஞ்சா என்னானு தோணுச்சு. 1990-ம் ஆண்டுல இருந்து மணல் தொழில்ல முதலீட்டாளரா இருக்கேன். ராஜீவ்காந்தி கொலை சம்பவத்துக்கு அப்புறம் வெடிமருந்து வியாபாரம் நடத்த முடியலை. ஆனா ரெக்கார்டிகல்லா எனக்கும் மணலுக்கும் எந்த தொடர்பும் இல்லை.''
''மணல் குவாரிகளை அரசே ஏற்று நடத்தலாம் என ஐடியா கொடுத்தது நீங்கள்​தானா?''
(சிறிது யோசித்துவிட்டு...) ''2003-ம் ஆண்டு வரை மணல் குவாரிகள் ஏலத்தில் தனியாருக்கு கொடுக்கப்பட்டு வந்தது. அதில் நான் கலந்துகொண்டது கிடையாது. பங்குதாரர்கள் மட்டும் போவார்கள். 2003 அக்டோபர் மாதம் முதல், அரசு நேரடியாக மணல் குவாரிகளை நடத்தத் தொடங்கியது. லிப்டிங் கான்ட்ராக்ட் மட்டும் இன்றைய தேதி வரை செய்கிறோம். நான் இதில் பெருமுதலீட்டாளர் மட்டும்தான். தனியாருக்கு ஏலம் விடும்போது ஒவ்வொரு இடத்திலும் ஏலம் விட்டால் அடிதடி ரகளை நடக்கும். இதனால் அரசே ஏற்று நடத்த முடிவு செய்தது. எங்க குரூப் மேஜராக செய்ததால், லிப்டிங் கான்ட்ராக்ட் எங்களுக்கு வழங்கப்பட்டது.''
''மணல் மூலமா அரசுக்கு கிடைக்கிற லாபம் எவ்வளவு?''
''2003-ம் ஆண்டில் மணல் குவாரிகளை அரசே ஏற்று நடத்தத் தொடங்கியபோது, அரசுக்கு கிடைத்த வருவாய் 27 கோடி. முதல் வருடத்திலேயே இது 100 கோடியாக உயர்ந்தது. அதன்பின் ஆண்டுக்கு 10 சதவிகிதம் அதிகரித்து வருகிறது. 2012-13-ம் ஆண்டில் அரசுக்கு இதுவரை கிடைத் திருக்கும் வருமானம் 190 கோடி.''
''மணல் தொழில் மூலம் உங்களுக்கு கிடைக்கிற லாபம் எவ்வளவு?''
''மணல் தொழிலில் எனக்கு நேரடியாகத் தொடர்பு இல்லை. மணல் எடுக்கப் பயன்படுத்தப்படுற மெஷின், லாரி எல்லாம் என்னுடையது. 500 பொக்லைன் மிஷின், 1,250 லாரிகள் எனக்கு இருக்கு. இதுக்கான வாடகை மட்டும் எனக்கு வருது. மணலில் வரும் லாபம், பங்குதாரர்களின் பங்கு போக, மீதிப் பணம் அறக்கட்டளைக்குக் கொடுக்கப்படுகிறது. வண்டி வாடகை பணத்தை மட்டும்தான் நான் எடுத்துக்கறேன். மணல்ல வர்ற பணம் அறக்கட்டளை மூலமா மக்களுக்கே கொடுத்துடுறோம். மணல் தொழில் மூலமாக அறக்கட்டளைக்கு ஆண்டுக்கு 100 கோடிக்கு குறையாமல் வரும். (சிறிது யோசித்தவர்) மாதம் 5 கோடி வீதம் 60 கோடி என எழுதிக்கோங்க. மணல் தொழில்ல எனக்கு பார்ட்னர்ஸ் 4 பேர். கோவையைச் சேர்ந்த பழனிச்சாமிதான் இப்போ தொழிலை கவனிச்சுக்கிறாரு.''
''அறக்கட்டளையோட சொத்து மதிப்பு எவ்வளவு?''
(கணக்கிடுகிறார்) ''இப்போதைய நிலவரப்படி மொத்தம் 1,250 கோடி வரும். அறக்கட்டளைக்கு வரும் பணத்தை என் குடும்பத்துக்கு எடுத்துக்கொள்ளவில்லை. ஆண்டுதோறும் அறக்கட்டளை மூலம் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறோம். முதலில் நான் சார்ந்த சமூகத்துக்கு மட்டும் இலவச உதவி தொகையை வழங்கினோம். 2008-ம் ஆண்டு முதல் கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு ஆகிய 4 மாவட்டங்களுக்கு வழங்கினோம். இப்போது தமிழகம் முழுவதும் உதவித்தொகையை வழங்கி வருகிறோம். நடப்பு ஆண்டில் மட்டும் 1 லட்சம் பேருக்கு 140 கோடி வரை கல்வி உதவித்தொகை வழங்க திட்டமிட்டு உள்ளோம். இதுவரை மொத்தம் மூன்றரை லட்சம் பேருக்கு 300 கோடி வரை வழங்கியுள்ளோம்.
என் லட்சியம் 10ஆயிரம் பேருக்காவது இலவசமாக உயர்நிலைக் கல்வியை அளிக்கும் வகையில் யுனிவர்சிட்டி அமைக்க வேண்டும் என்பதுதான். அதற்கான வேலைகள் நடந்து வருகிறது. நிதி கொஞ்சம் குறைவாக உள்ளது. தேவையான அளவு பணம் சேர்ந்தவுடன் யுனிவர்சிட்டி அமைக்கப்படும். கல்வி முழுமையாக இலவசம். கல்வியைப் பொறுத்தவரை 10 பைசாகூட காசாக்க விரும்பவில்லை. பொதுமக்களிடம் இருந்து எடுத்த பொதுச்சொத்தை பொதுமக்களுக்கே செலவு செய்கிறேன். கல்வி மட்டுமல்லாது மருத்துவம், குளம் தூர்வார என பல உதவிகளை செய்து வருகிறேன்.''
''மணலில் சம்பாதித்ததை மறைக்கத்தான் இந்த உதவியா?''
''அதை யாராலும் மறைக்க முடியாது. மறைக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. மறைக்காம பணத்தை நானே வைச்சுகிட்டா யார் என்னைக் கேட்க முடியும்? என் மனசாட்சிக்கு நான் செய்றேன். மணலில் கிடைக்கும் பணத்தை நானோ, என் குடும்பத்தினரோ எடுத்துக்கறதில்லை. அதை முழுமையாக அறக்கட்டளை மூலம் மக்களுக்கே செலவழிக்கிறேன். உண்மையைச் சொன்னா யாரும் நம்ப மாட்டார்கள். சமூகத்தில் மரியாதையே இல்லாத தொழிலாக மணல், சாராயத் தொழில் உள்ளிட்ட தொழில்கள் உள்ளன. நான் கொடுக்கணும்னு என்ன இருக்கு? பணம் இல்லாதவனுக்குத்தான் பணம் பெரிய விஷயம். என்னைப் பொறுத்தவரை மணல் மூலமா சேர்வது எல்லாமே எனக்குச் செல்லாத காசு. அதை மக்களுக்கு செலவழிக்கிறேன். எதிர்பாராம ஒரு வாய்ப்பு கிடைச்சது. பொதுச் சொத்தை எடுத்து வைத்துக்க வேண்டாங்கறதால் இந்த உதவியை செய்யறேன். சாதாரண விவசாய குடும்பத்துல பிறந்து இவ்வளவு செய்வேன் என எதிர்பார்க்கவில்லை.''
''மணல் அள்ளுவதால் நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்படுகிறதே... அதைப் பற்றி எல்லாம் கவலை இல்லையா?''
''ஆத்துல 10 அடிக்கு மணல் எடுக்கறாங்க. இல்லைனு சொல்லலை. பெரிய அளவுக்கு ஒரு மழை வந்தா குழி எல்லாம் சமமாகி சரியாகிடும். ஆறு வேணும்னா 4 அடி கீழே போயிருக்கும். ஆனா சமமாயிடும். நிலத்தடி நீர் பாதிக்கப்படுது... இல்லைனு சொல்லலை. மழை வந்து ஆத்துல வெள்ளம் வந்தா எந்தப் பிரச்னையும் இல்லை. பாலாறு போன்ற தண்ணீர் இல்லாத ஆத்துலதான் பிரச்னை. அங்கயும் செக் டேம் கட்டி மழை நீரை சேகரிக்கலாம்னு அரசுக்கு யோசனை சொல்லி இருக்கோம்.''
''அ.தி.மு.க., தி.மு.க. என்று எந்த ஆட்சி வந்தாலும் உங்களை ஏத்துக்கறாங்க. அப்படி என்ன ரகசியம்?''
''மணல் லிப்டிங் கான்ட்ராக்ட்ங்கறது தமிழகம் முழுவதும் பெரிய வியாபாரம். அதை நானெல்லாம் நடத்துவேன்னு எதிர்பார்க்கவே இல்லை. நாணயம், மரியாதையோட இந்தத் தொழிலைச் செய்யறேன். ரெண்டு பேரும் என்ன சொல்றாங்களோ அதைச் சரியாக செய்வதால் ஏத்துகிட்டாங்க.''  
''உதவித்தொகை கொடுக்கறீங்க... நிறைய உதவி செய்யறீங்க... அரசியலுக்கு வரப்போகிறீர்களா?''
(சிரிக்கிறார்) ''அரசியல் கூட்டங்கள் நடக்குற பக்கம்கூட போக விரும்பவில்லை. நம்ம சுபாவத்துக்கு அரசியல் சரிப்பட்டு வராது. இப்போ சேவை அரசியல் ஒரு சதவிகிதம்கூட இல்லை. நமக்கு அதெல்லாம் வேண்டாங்க...''
- சர்வசாதாரணமாகச் சொல்கிறார் ஆறுமுகச்சாமி.

No comments:

Post a Comment