Saturday 25 May 2013

பழிவாங்குகிறதா தமிழக போலீஸ்? வெடித்தது பெங்களூரு.. அலறியது கோவை!


பெங்களூரில் வெடித்த குண்டு, கோவையை அதிரவைத்தி​ருக்கிறது. குண்டு வெடிப்புச் சம்பவத்துக்குக் காரணம் என்று, போலீஸார் கைதுசெய்திருக்கும் 11 பேரில் எட்டு பேர் கோவையைச் சேர்ந்தவர்கள். 
'இவர்கள் உண்மையான குற்றவாளிகள் அல்ல. பழிவாங்கும் நடவடிக்கையாகவே தமிழகக் காவல் துறை எங்களை சிக்கவைத்திருக்கிறது’ என்று, இஸ்லாமியக் கூட்டமைப்புகள் போராட்டம் நடத்திவருகிறது. சோதனை என்ற பெயரில் போலீஸார் மர்மப் பொருட்களை எங்களது வீடுகளில் வைத்துள்ளனர் என்ற குற்றச்சாட்டுக்களும் கைதானவர்களின் வீடுகளில் இருந்து கேட்க ஆரம்பித்துள்ளது.
குண்டு வெடிப்பு வழக்கில் கைதானவர்களின் உறவினர்களைச் சந்தித்துப் பேசினோம். 'வளையல்’ ஹக்கிம் என்பவரது மனைவி ரமலத் பானு, 'விசாரணை என்றுதான் எனது கணவரை போலீசார் அழைத்துச் சென்றனர். பிறகுதான் குண்டு வெடிப்பு வழக்கில் கைதுசெய்ததாகத் தெரியவந்தது. அவரைக் கைதுசெய்த மறுநாள் உள்ளூர் போலீஸார் எங்கள் வீட்டுக்கு வந்து சோதனை நடத்தினர். பெங்களூரு போலீசாரும் வீட்டுக்கு வந்து சோதனை செய்தனர். அவர்கள் கொண்டுவந்த பொருள் ஒன்றை எங்கள் வீட்டு பீரோவின் மேல் வைக்கமுயன்றனர். என்னுடைய அம்மா சுல்தான் பீவி, அதைப் பார்த்துட்டு சத்தம் போட்டாங்க. அதனால அந்தப் பொருளை வைக்காம எடுத்துட்டுப் போய்ட்டாங்க. அந்தக் கோபத்துல போலீஸ் எங்க அம்மாவைக் கீழே தள்ளிவிட்டுட்டாங்க. என் கணவர் மேல் எந்தத் தப்பும் இல்லை. உண்மையான குற்றவாளிகளைக் கைதுசெய்யட்டும். யாரோ செய்த தவறுக்கு நாங்க எதுக்கு பலிகடா ஆகணும்?'' என்று கலங்கினார்.
கிச்சன் புகாரி என்பவரின் மனைவி ஜெனிலாவைச் சந்தித்தோம். 'கடந்த 7-ம் தேதி நடந்த ஒரு மோதல் பிரச்னையில் இஸ்லாமியர்கள் கைதுசெய்யப்பட்டதுக்கு எதிராகப் போலீஸ் மீது என் கணவர் வழக்கு தொடர்ந்தார். அது போலீஸுக்குப் பிடிக்கவில்லை. அதற்குப் பழிவாங்கவே அவர் மீது பொய் வழக்குப் போட்டுள்ளனர். நெல்லை சென்றபோது அவரைக் கைதுசெய்து, நாய் சங்கிலியால் கட்டி எங்கள் வீட்டுக்குச் இழுத்து வந்தனர். அப்போது அவர், 'கரன்ட் ஷாக் கொடுத்து மிக மோசமாகச் சித்ரவதை செய்றாங்க. நான் உயிரோட வருவேனானு சந்தேகமாக இருக்கு. எனக்காக துவா செய்யுங்க’னு அழுதார்'' என்று வேதனையுடன் சொன்னார்.
சதாம் உசேனின் தாயார் பஷிரியா, 'எனது மகன் வேறு ஒரு மோதல் வழக்கில் கடந்த ஏப்ரல் 7-ம் தேதி கைதுசெய்யப்பட்டான். கோவை மத்தியச் சிறையில் இருந்தவனை இப்போ குண்டு வெடிப்பு வழக்கில் கைதுசெய்திருக்காங்க. என் மகனுக்கும் குண்டு வெடிப்புக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அவனைப் பார்த்து 50 நாட்கள் ஆகிவிட்டன. உயிரோடு இருக்கானா என்ற தகவல்கூட தெரியவில்லை'' என்றவர் மேற்கொண்டு பேச முடியாமல் அழ ஆரம்பித்தார்.
தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முஹம்மது ஹனிபா நம்மிடம், 'இங்கே கைதுசெய்யப்பட்ட யாரும் உண்மையான குற்றவாளிகள் இல்லை. தீவிரவாதிகள் வேரறுக்கப்பட வேண்டும், குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் எங்களுக்கு எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. எங்கே குண்டு வெடிப்பு  நடந்தாலும் அதற்கு முஸ்லிம்களைப் பலிகடா ஆக்குவது சரியல்ல. தமிழக போலீஸார் யாரைக் கைதுசெய்ய நினைக்கிறார்களோ, அவர்களை எல்லாம் பெங்களூரூ போலீஸ் மூலம் கைதுசெய்துள்ளனர். தமிழக உளவுத் துறையும், மத்திய உளவுத் துறையும் திட்டமிட்டே இதைச் செய்கிறது'' என்று குற்றம் சாட்டினார்.
கோவை மாநகர காவல் துறை உயர் அதிகாரி ஒருவரிடம் பேசினோம். 'பெங்களூரு குண்டு வெடிப்புச் சம்பவத்தைப் பொறுத்தவரை, கோவையில் கைதுசெய்யப்பட்ட யாருக்கும் பெரிய அளவில் தொடர்பு இல்லை. சிம் கார்டு வாங்கிக் கொடுத்தது உள்ளிட்ட சிறிய அளவிலான உதவிகளைத்தான் செய்துள்ளனர். கைதானவர்களின் வீடுகளில் வெடிபொருட்கள் எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை. இது, கர்நாடக மாநில போலீஸாரின் வழக்கு என்பதால், நாங்கள் ஆர்வம் காட்டவில்லை. கைது நடவடிக்கையால் கோவையில் எதுவும் பிரச்னை வரக் கூடாது என்பதற்காகப் பாதுகாப்பைப் பலப்படுத்தியுள்ளோம்'' என்றார்.
கோவையில் மீண்டும் மத ரீதியான மோதல் நடந்துவிடாமல் எச்சரிக்கையாக பார்த்துக்கொள்ள வேண்டியது காவல் துறையின் பொறுப்பு.
-ச.ஜெ.ரவி

இது தமிழின் மீதான இறுதி யுத்தம்! - டி.அருள் எழிலன்


தமிழ் மொழி இன்னும் வாழ்கிறது என்றால், அது அரசுப் பள்ளிகளின் தயவில்தான். முந்தைய தி.மு.க. அரசு சமச்சீர் கல்வியை அறிமுகம் செய்தபோது, அதில் இருந்து தப்பிக்க விரும்பிய பெற்றோர் சமச்சீர் கல்விக்குக் கட்டுப்படாத கல்வி முறையை நோக்கி ஓடினார்கள். தமிழை ஒரு மொழிப் பாடமாகக்கொண்டு தேர்வெழுதி 10-வது மற்றும் 2 தேர்வுகளில் உச்சபட்ச மதிப்பெண்கள் பெறும் மாணவர்களை 'மாநில முதல்வர்களாக’ அறிவிக்கும் நடைமுறை காரணமாகவே, லட்சக்கணக்கான மாணவர் களின் புத்தகப் பைகளில் தமிழ்ப் புத்தகம் இருக்கிறது. இப்படியெல்லாம் காலந்தோறும் அரசுப் பள்ளிகள் மட்டுமே தமிழைத் தாங்கிப் பிடித்துக்கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், எதிர்வரும் கல்வி ஆண்டிலிருந்து அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி அமல்படுத்தப்படும் என்று அறிவித்து அதிர்ச்சி கிளப்பிஇருக்கிறது தமிழக அரசு.


'இது தமிழ் மொழி மீது அரசாங்கம் தொடுத்திருக்கும் இறுதி யுத்தம்!’ என்று கல்வியாளர்களும் தமிழ் ஆர்வலர்களும் கொதிக்க, அரசுப் பள்ளி மாணவர்களின் பெற்றோர்களோ, 'இனி தங்கள் பிள்ளைகளுக்கும் ஆங்கில வழிக் கல்வி கிடைக்கும்’ என்று மகிழ்கிறார்கள்.
இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும்தான் ஏகப்பட்ட கல்வித்திட்டங்கள் அமலில் இருக் கின்றன. பெற்றோர்களிடம் நிலவும் ஆங்கில மோகத்தை அடிப்படையாக வைத்து, சுமார் ஏழு விதமான கல்விக் கொள்கைகள் கீழிருந்து மேலாக சாதி யைப் போல அடுக்கிக் கட்டப்பட்டுஉள்ளன. அரசுப் பள்ளி, மெட்ரிக் பள்ளி, மத்தியக் கல்வித் திட்டம், சர்வதேச உறைவிடப் பள்ளி எனப் பல்வேறு வகையான படிப்புகள். இதில் மேல் அடுக்கில் இருக்கும் மாணவர்கள் தனக்குக் கீழ் இருப்பவர்களை இழிவாகப் பார்க்கும் மனோபாவத்தை குழந்தைப் பருவத்திலேயே விதைத்துவிட்டிருக்கிறது நம் சமூக அமைப்பு.

தமிழகத்தின் மூத்த கல்வியாளர் எஸ்.எஸ்.ராஜகோபால், ''இந்திரா காந்தி நெருக்கடி நிலையை அறிவித்தபோது உருவானதுதான் இந்தக் குழப்பமான கல்வி முறை. 1978-ல் அமெரிக்க உதவியுடன்தான் நமது மதிய உணவுத் திட்டங்கள் நடைபெற்றன. அப்போதைய அமெரிக்க நெருக்கடி காரணமாக, மதிய உணவுத் திட்டங்களுக்கு மாற்றுவழியில் நிதி திரட்டவே முதல்வர் எம்.ஜி.ஆர். கல்வியைத் தனியார் வசம் ஒப்படைத்தார். அன்று தொடங்கி இன்று வரை புற்றீசல்போல தனியார் பள்ளிகள் முளைத்து தமிழகத்தில் கல்விச் சூழலையே நாசமாக்கிவிட்டார்கள். ஆங்கில மோகம் மட்டுமே தனியார் பள்ளிகள் கோலோச்சுவதற்குக் காரணம். இப்போது அரசும் ஆங்கிலக் கல்வியைக் காட்டி, தனது செல்வாக்கை உயர்த்த நினைக்கிறது. இது வெறும் கல்வி முறை சார்ந்த பிரச்னை மட்டுமல்ல, சமூகநீதி சார்ந்த விஷயம்'' என்கிறார்.

புற்றீசல்போலப் பெருகும் தனியார் பள்ளிகளைக் கட்டுப்படுத்தவும், தனியார் பள்ளிகள் மீதான மோகத்தைக் குறைக்கவுமே அரசுப் பள்ளிகளில் ஆங்கிலம் என்ற முடிவை அரசு எடுத்ததாகக் கூறுகிறார்கள்.

''பெரும்பாலான தனியார் பள்ளிகளில் பாடம் சொல்லிக்கொடுக்கும் ஆசிரியர்கள், தமிழில்தான் ஆங்கிலம் கற்றுக்கொடுக்கிறார்கள். ஏனெனில், அவர்களுக்கே ஆங்கில அறிவு அரைகுறையாகத்தான் இருக்கிறது. அதனால்தான் எல்.கே.ஜி. முதல் கல்லூரியின் இரண்டாம் ஆண்டு வரை சுமார் 16 ஆண்டுகள் ஆங்கிலத்தை ஒரு மொழிப் பாடமாகப் படித்தும் மாணவர்களுக்கு ஆங்கிலப் புலமை இல்லாமல்போகும் அவலம் நிலவுகிறது!'' என்று கற்றுக்கொடுத்தலில் உள்ள குறைபாட்டைச் சுட்டிக்காட்டுகிறார் சமூக ஆர்வலர் நலங்கிள்ளி.

ஆங்கில வழிக் கற்றலில் என்ன சிக்கல்கள் நேரும் என்பதைச் சுட்டிக்காட்டுகிறார் பேராசிரியர் கல்விமணி. ''நான் பள்ளி படித்த காலகட்டத்தில் 1957-ம் ஆண்டுவாக்கில் ஆறாம் வகுப்பில் இருந்து ஆங்கிலத்தை அறிமுகம்செய்தார்கள். ஆரம்பக் கல்வியைத் தமிழில் பயின்றுவிட்டு, ஆறாம் வகுப்பில் இருந்து ஆங்கிலம் கற்கத் துவங்கியபோது அது ஆரோக்கியமான கல்வி புகட்டலாக இருந்தது. ஆனால், இப்போது தாய்மொழியைக் கற்பதற்கு முன்பே ஆங்கிலத்தைக் கற்பிப்பது நிச்சயமாகக் கடுமையான பின்விளைவு களை உருவாக்கும். ஆங்கில மொழி படிப்பது வேறு, ஆங்கில வழியில் படிப்பது என்பது வேறு. இந்த வேறுபாட்டைப் பெற்றோர் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். பலரும் ஆங்கில வழியில் படித்தால்தான் ஆங்கிலத்தில் நன்றாகப் பேச முடியும் எனக் கருதுகின்றனர். ஆங்கில வழிக் கல்வி புகட்டும் வகுப்பறையில் வேதியியல், இயற்பியல் என அந்தந்தப் பாடங் களைப் புரியவைப்பதில்தான் ஆசிரியர்கள் கவனம் செலுத்துவார்களே தவிர, ஆங்கில இலக்கணத்தைக் கற்றுக் கொடுக்க மாட்டார்கள். 

மேலும், சில பொதுவான, பிரபலமான சொற்களை மட்டும் ஆங்கிலத்தில் சொல்லிக்கொடுப்பார்கள். ஒரு வினை அல்லது ஆராய்ச்சி சம்பந்தப்பட்ட அனைத்துச் சொற்களையும் கற்றுக்கொடுக்க மாட்டார்கள். ஆக, ஒரு மாணவனின் ஆய்வறிவு என்பது அந்த ஆசிரியர் சொல்லிக்கொடுத்த மிகச் சில வார்த்தை களுக்குள் அடங்கிவிடுகிறது.  

இன்றும் தமிழகத்தில் 80 விழுக்காடு மாணவர்கள் அரசுப் பள்ளிகளில்தான் படிக்கிறார்கள். 12-ம் வகுப்புப் பாடத்தை 11-ம் வகுப்பிலேயே கற்று மாவட்ட அளவில் முதல் இடம் பெறும் நாமக்கல் பள்ளிகளின் மாணவர் கள் சராசரியாக 1,180 மதிப்பெண் பெறுகிறார்கள். டிசம்பர் மாதம் முதலே அடுத்த கல்வி ஆண்டுக்கான பாடம் படிக்கும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் மாணவர்களோ மாவட்ட அளவில்  1,160 மதிப்பெண்கள் பெறுகிறார்கள். ஆனால், அந்தந்த பாடத்தை அந்தந்த வருடம் மட்டுமே பயிலும் அரசுப் பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவில் 1,145 மதிப்பெண்கள் பெறுகிறார்கள். அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் மற்றவர்களுக்கும் சராசரியாக 20 முதல் 40 வரை மதிப்பெண்கள் வித்தியாசப்படுகின்றன. 

இதில் நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் இடையிலான இடைவெளி, மாணவர்களின் வறுமைச் சூழல், வகுப்புச் சூழல் என எல்லாவற்றையும் கணக்கில்கொண்டு பார்க்கும்போது, அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மிகச் சிறப்பாகவே பயில்கிறார்கள். ஆக, இப்போதைய உடனடித் தேவை அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்தி கிராமப்புற மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டை அதிகரித்து சமநிலையை உண்டாக்கும் நடைமுறைகள்தான். இதைச் சாதித்தாலே அரசுப் பள்ளி மாணவர்கள் பல துறைகளில் பரிமளிப்பார்கள்.

ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம்  வகுப்பு வரை தமிழே பயிற்று மொழியாக இருக்க வேண்டும். இதுதான் வருங்காலச் சந்ததியினருக்கான சரியான பாதையாக இருக்க முடியும்!'' என்று முடித்தார் பேராசிரியர் கல்விமணி.

100 கோடி ரூபாய் செலவில் தமிழ்த் தாய்க்குச் சிலை வைக்கும் முதல்வர், அந்தத் தமிழ்த் தாயின் கையில் ஆங்கிலப் பாடப் புத்தகத்தைக் கொடுப்பது என்ன நியாயம்?