Wednesday 2 October 2013

எனக்கு இது செல்லாக்காசு... அதை மக்களுக்குச் செலவழிக்கிறேன்! 'ஆயிரம் கோடி' ஆறுமுகச்சாமி அதிரடிப் பேட்டி!


ரசு நிறுவனம் துவங்கி கோவில் உண்டியல் பணம் வரை பல இடங்களில் கொள்ளை அடிக்கும் அர்ஜூன், மாணவர்களுக்கு கல்வி உதவிகளை வாரி வழங்குவார். மக்கள் கல்வி மையம் எனும் இலவச கல்வி மையத்தை துவங்குவார். இது ஜென்டில்மேன் படத்தின் கதை. நிஜத்தில் இப்படியெல்லாம் நடக்குமா என நம் எண்ணுவதை கிட்டத்தட்ட நிகழ்த்தி காட்டுகிறார் ஆறுமுகசாமி. ஆனால் இவர் கொள்ளை அடிப்பதாக கூறப்படுவது தமிழகத்தின் தாய் மடியாக கருதப்படும் ஆற்று மணல் என்பது தான் வேதனை. 
மணல் தொழிலில் போட்டியே இல்லாத மோனோபலியாக கொள்ளை லாபம் சம்பாதித்து வருவதாக அறியப்பட்டு வரும் ஆறுமுகசாமி, மணல் மூலம் கிடைக்கும் லாபத்தில் இந்தாண்டு மட்டும் வழங்க உள்ள கல்வி உதவித்தொகை மட்டும் ரூ.140 கோடிக்கும் மேல். 
“மணலில் கிடைத்த பணத்தின் ஒரு பகுதி, எனது மனைவி பெயரிலான விஜயலட்சுமி அறக்கட்டளையில் சேர்க்கப்பட்டு வருகிறது. அறக்கட்டளையின் தற்போதைய சொத்து மதிப்பு ரூ.1,250 கோடிக்கும் அதிகம். ஆண்டுக்கு சராசரியாக மணல் தொழில் மூலம் ரூ.100 கோடி அறக்கட்டளைக்கு சேர்க்கப்பட்டு வருகிறது,” என வெளிப்படையாகவே ஆறுமுகசாமி கூறும் அளவுக்கு இந்த தொழிலில் கொட்டுகிறது பணம். 
மணலில் கிடைக்கும் லாபத்தின் ஒரு பகுதியே இவ்வளவு என்றால், அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள், ஆறுமுகசாமியின் பங்கு(?)தாரர்கள் போன்றவர்களுக்கு சேரும் பணம் எல்லாம் சேர்த்தால்...மொத்த லாபம் எவ்வளவாக இருக்கும்? 
‘இயற்கை வளங்களை அநியாயமாக கொள்ளையடிப்பதால், நீர் மட்டம் குறைகிறது. சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது ஆற்றுப் படுகைகளில் அளவுக்கு அதிகமாக மணலைச் சுரண்டுவது, தாயின் மடியை அறுத்து பால் குடிப்பதற்கு சமமானது.’ என்றெல்லாம், பல ஆண்டுகளாக சூழல் ஆர்வலர்கள் சொல்லி வந்தாலும், மணல் கொள்ளை மட்டும் தடுக்கப்படவே இல்லை. நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கும், சுற்றுச்சூழல் சீர்கெடும் என்பதெல்லாம் அரசுக்கே தெரிந்தாலும், யாரும் இதை கண்டுகொள்ளவில்லை. இதனால் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், ஆற்று மணலை பொறுத்தவரை ஆறுமுகசாமியின் ஆட்சி தான்.
“தமிழகத்தில் மணல் கொள்ளையை இரும்புக்கரம் கொண்டு அடக்குவேன் எனக் கூறும் ஜெயலலிதாவுக்கு, கோவை ஆறுமுகசாமி, தமிழகம் முழுவதும் மணல் கொள்ளையில் ஈடுபடுவது தெரியாதா?,” என கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு பின் அதிமுகவுடனான உறவை முறித்துக்கொண்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த், பகிரங்கமாக கேள்வி எழுப்பினார். இன்று வரை விஜயகாந்தின் கேள்விக்கு  ஜெயலலிதா பதில் சொல்லவில்லை. 
அதேபோல் ஜெயலலிதாவை பற்றி யாராவது விமர்சித்தால் உடன் சேர்ந்து விமர்சிக்கும் கருணாநிதியும், விஜயகாந்த் கேட்ட இந்த கேள்வியை இதுவரை திருப்பிக் கேட்கவில்லை. அந்த அளவுக்கு திமுக, அதிமுகவில் அதிகாரம் படைத்தவராக இருக்கிறார் கோவை ஆறுமுகசாமி. தமிழகத்தில் ஆள்வது யாராக இருந்தாலும் இவரது செல்வாக்கு மட்டும் குறையாது. கடந்த 23 ஆண்டுகளாக மணல் தொழிலில், பெரு வியாபாரம் செய்யும் முதலாளியாக பரவலாக அறியப்பட்டு வருகிறார் இவர். 
மதுரையில் கிரானைட் தொழிலில் ஈடுபட்டு பெரு லாபம் சம்பாதித்து வந்த பி.ஆர்.பழனிச்சாமி, தென் தமிழகத்தில் கார்னெட் மணல் விற்பனை மூலம் பெருமளவு லாபம் ஈட்டிய வைகுண்டராஜன், தமிழகம் முழுவதும் ஆற்றுப் படுகைகளில், பொக்லைன் எந்திரம் வைத்து மணல் அள்ளி வியாபாரம் செய்பவராக கூறப்படும் கோவை ஆறுமுகசாமி ஆகியோர் அரசு கஜானாக்களுக்கு செல்லவேண்டியதை தங்களது லாபமாக அள்ளிக்கொண்டனர் என ஒரு பேச்சு நீண்ட காலமாக உண்டு. 
இந்த மூவரில் கிரானைட் பி.ஆர். பழனிச்சாமி மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு விட்டது. கார்னெட் மணல் விவகாரம் தொடர்பாக விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஆறுமுகசாமி மட்டும் எந்த நிர்பந்தமும் இல்லாமல் ஹாயாக இருக்கிறார். “நான் கடந்த 23 ஆண்டுகளாக மணல் வியாபாரத்தில் தொடர்பில் இருந்தாலும், மணலுக்கும் எனக்கும் ஆவணமாக எந்த தொடர்பும் இதுவரை இல்லை. பெரு முதலீட்டாளராக இந்த தொழிலில் இருக்கிறேன். ஆனால் என் பெயரில் எதுவும் இல்லை” என வெளிப்படையாகவே சொல்லி வரும் கோவை ஆறுமுகசாமி நிர்வகிக்கும் விஜயலட்சுமி அறக்கட்டளையின் சொத்து ரூ. 1,250 கோடிக்கும் அதிகம்.
1996ம் ஆண்டு திமுக ஆட்சிக்காலத்தில் விதிமீறி மணல் எடுத்ததாக கூறி, இவர் சார்ந்த நிறுவனத்துக்கு பல கோடி அபராதம் விதிக்கப்பட்டதாம். வருவாய் அதிகாரிகள் வந்து விசாரித்தனர். ஆவணங்களை சரிபார்த்தனர். அப்போது தான் அவர்களுக்கு தெரிந்தது, ஆறுமுகசாமிக்கும் மணல் தொழிலுக்கும் ஆவண ரீதியாக எந்த தொடர்பும் இல்லை. அவரது டிரைவர் தான் கான்ட்ராக்டராக இருந்திருக்கிறார். அதிகாரிகள் திரும்ப சென்று விட்டனர். இந்த 23 ஆண்டுகளில் இப்படித்தான் தொழில் நடத்தி வருகிறார் இவர். யார் இந்த ஆறுமுகசாமி?
கோவை, மாவட்டம் அன்னூர் அருகே உள்ள குக்கிராமத்தில் எளிய விவசாய குடும்பத்தில் பிறந்த இவர், படித்தது எஸ்.எஸ்.எல்.சி. வரை தான். அதிலும் தேர்ச்சி பெறவில்லை. திமுகவில் இருந்த இவர், தனது 22வது வயதில், குப்பனூர் ஊராட்சி தலைவரானார். 1977ம் ஆண்டு மேட்டுப்பாளையம் தொகுதியில் திமுக சார்பில் எம்.எல்.ஏ.வுக்கு போட்டியிட்ட ஆறுமுகசாமியால் 4வது இடத்தையே பிடிக்க முடிந்தது. அதற்கு பின்னால் 1989ம் ஆண்டு வரை திமுகவில் இருந்த அவர், திமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
இதற்கு பின்னர் 1990ம் ஆண்டு மணல் தொழிலில் கால் பதிக்கிறார். ஏலம் எடுத்து மணல் விற்பனை செய்ய துவங்கிய ஆறுமுகசாமி, 2003ம் ஆண்டுக்கு பின்னர் உச்சத்தை எட்ட துவங்கினார். 2003ம் ஆண்டு வரை தனியாருக்கு ஏலம் விடப்பட்ட மணல் குவாரிகளை அதன் பின்னர் அரசே ஏற்று நடத்தியது. 
“கட்டட கட்டுமானப் பணியின் எல்லா மட்டத்திலும் மணல் தேவைப்படுகிறது. மணல் இல்லையேல் கட்டுமானப் பணிகள் இல்லை. எனவே மணல் குவாரி என்பது ஒரு தங்கச் சுரங்கம்” என்பதை ஜெயலலிதாவுக்கு சொன்னவரே இவர் தான் என்றும் ஒரு பேச்சு உண்டு. பொதுப்பணித்துறை மூலம் அரசே மணல் குவாரிகளை நடத்தினாலும், மணலை அள்ளி லாரிகளில் ஏற்றும் 'லிப்டிங் அண்ட் லோடிங் கான்ட்ராக்டை’ ஆறுமுகசாமியிடம் வழங்கப்பட்டது. 
2006ம் ஆண்டு அடுத்து திமுக ஆட்சிக்கு வந்ததும் வேறு சிலரிடம் இந்த கான்ட்ராக்ட் கொடுக்கப்பட்டது. ஆனால் அது சரிவரவில்லை. யாரிடம் இந்த பணியை ஒப்படைப்பது என ஆலோசித்தபோது, ‘அட ஆறுமுகசாமியையே கூப்பிடுங்கப்பா. அது தான் பேர்லயே ஆறு வைச்சிருக்காரே,’ என கருணாநிதியே அழைத்து ஆறுமுகசாமியிடம் கான்ட்ராக்ட் வழங்கப்பட்டது. இன்று வரை கோவை ஆறுமுகசாமியின் கண் அசைவில் தமிழகம் முழுவதும் மணல் தொழில் நடக்கிறது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் வேடிக்கை தான் பார்க்கிறார்கள். 
இப்படி மணல் மூலம் பெரும் தொகை சம்பாதித்து வரும் ஆறுமுகசாமி, தற்போது கல்வி உதவி தொகைகளை வாரி வழங்கி வருகிறார். அரசு பள்ளிகளில் 80 சதவீதம், தனியார் பள்ளியில் 90 சதவீதம் மதிப்பெண் பெற்றால் யார் என்ன என கேட்காமல் கல்வி உதவி என ஒரு தொகையை கொடுக்கிறார். இதுவரை 3 லட்சம் பேருக்கு ரூ.300 கோடி வரை உதவித்தொகை வழங்கியிருப்பதாக சொல்கிறார் இவர். 
இதில் மிக பெரும்பாலோனோர் காரில் வந்து உதவித்தொகைகளை வாங்கிச்சென்றவர்கள் தான். இதை ஆறுமுகசாமியும் ஒப்புக்கொள்ளவே செய்கிறார். “கல்வி உதவித்தொகை பெருபவர்களில் 25 சதவீதம் பேர் தான் உண்மையில் பயனடையராங்க. மத்தவங்களெல்லாம் வசதியானவங்க தான். என்ன செய்யறது. கேட்டவங்களுக்கெல்லாம் கொடுக்கறேன்,” என விளக்கம் கொடுக்கிறார் அவர்.
இலவச பள்ளியை நடத்தி வருகிறார். குளம் தூர்வார நிதி கோடிக்கணக்கில் கொடுக்கிறார். அரசு மருத்துவமனைக்கு உதவுகிறார். இதன் மூலம் மணல் கொள்ளையில் அடிபடும் தன் பெயரை மாற்ற நினைக்கிறார் 71 வயதை கடக்க உள்ள ஆறுமுகசாமி. ஆனால் இன்னும் ஆற்று மணல் எடுக்கும் தொழிலை கைவிட்டு விடவில்லை. சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் மணல் எடுக்க தடை விதிக்க வேண்டும் என பசுமை தீர்ப்பாயம் கடுமையாக கூறிய பின்னரும் அதைப்பற்றி கவலை கொள்ளாமல், இயற்கை வளங்களை சிதைத்து  மணல் எடுப்பது தொடர்ந்து வருகிறது. தன்னை சார்ந்தவர்கள் மூலம் ஆற்று மணல் தொழிலை எந்த தொய்வுமின்றி, முன்னரை விட வேகமாக நடத்தி வருகிறார் ஆறுமுகசாமி.
மேடை மேடையாக மணல் மாபியா என வர்ணிக்கப்பட்ட ஆறுமுகசாமி, இப்போது கல்வி தந்தை என புகழப்படுகிறார். முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் முன்னிலையில் கவுரவிக்கபடுகிறார். கொடை வள்ளல் என போற்றப்படுகிறார். ஒரு வேளை இதை நோக்கி தான் எல்லாம் செய்தாரோ என்னவோ?.
தமிழக ஆற்றுப் படுகைகளில் மணல் ஒட்டுமொத்தமாக சுரண்டி கொள்ளையடிக்கப்படுவதால் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்து யாரும் தெரிந்துகொள்ளவில்லை. ஏற்கனவே ஆறுகளில் நீர் இல்லாமல் போய்விட்டது. மழைநீரை உள்வாங்கி நிலத்தடி நீராக சேமித்துத் தரும் மணலும் இல்லையென்றால் எதிர்காலத்தில் தமிழகம் பாலைவனமாகிவிடும் என்பதை யாரும் உணர்ந்தபாடில்லை. அடுத்த தலைமுறைக்கு கரன்சிகளை விட உயிர்வாழ அவசியமான நீர்வளப்படுகைகளை பாதுகாத்து வைக்க வேண்டியது அவசியம் என்பதை நாம் இன்னும் உணர்ந்த பாடில்லை. 
“நான் கிராமத்தில் வளர்ந்தவன் பொதுச்சொத்து என்பது குலநாசம் என்பதை அறிந்தவன். பொது சொத்து பொதுமக்களுக்கே போய் சேரவேண்டும் என்பதற்காகத்தான் இந்த உதவிகளை செய்து வருகிறேன்” என உதவிகளுக்கு விளக்கம் கொடுக்கிறார் ஆறுமுகசாமி. ஆற்று மணலை விதிமீறி அள்ளுவது தலைமுறையையே நாசம் செய்துவிடும் என்பதை இவருக்கு எப்படி புரிய வைக்க...?
ஆறுமுகச்சாமியிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.
''மணல் தொழிலுக்கு எப்படி வந்தீங்க?''
''கோவை மாவட்டம், அன்னூர் அருகே உள்ள குக்கிராமத்தில் பிறந்தேன். ஊராட்சி தலைவரா இருந்தேன். சட்டமன்றத் தேர்தலில்கூட போட் டியிட்டேன். அதுக்கு அப்புறம் குழந்தைங்க படிப்புக்காக கோவை வந்தேன். முதல்ல திரைப்பட விநியோக வேலைகளை செஞ்சேன். அது சரியா வரலை. அப்புறம் வெடிமருந்து வியாபாரம் செஞ்சேன். அப்போ எங்க வீட்டுல கொஞ்சம் கட்டுமான வேலை நடந்துட்டு இருந்துச்சு. அதுக்கு மணல் வாங்குறப்போ நாளுக்கு ஒரு விலை சொன்னாங்க.  அதுல முதலீடு செஞ்சா என்னானு தோணுச்சு. 1990-ம் ஆண்டுல இருந்து மணல் தொழில்ல முதலீட்டாளரா இருக்கேன். ராஜீவ்காந்தி கொலை சம்பவத்துக்கு அப்புறம் வெடிமருந்து வியாபாரம் நடத்த முடியலை. ஆனா ரெக்கார்டிகல்லா எனக்கும் மணலுக்கும் எந்த தொடர்பும் இல்லை.''
''மணல் குவாரிகளை அரசே ஏற்று நடத்தலாம் என ஐடியா கொடுத்தது நீங்கள்​தானா?''
(சிறிது யோசித்துவிட்டு...) ''2003-ம் ஆண்டு வரை மணல் குவாரிகள் ஏலத்தில் தனியாருக்கு கொடுக்கப்பட்டு வந்தது. அதில் நான் கலந்துகொண்டது கிடையாது. பங்குதாரர்கள் மட்டும் போவார்கள். 2003 அக்டோபர் மாதம் முதல், அரசு நேரடியாக மணல் குவாரிகளை நடத்தத் தொடங்கியது. லிப்டிங் கான்ட்ராக்ட் மட்டும் இன்றைய தேதி வரை செய்கிறோம். நான் இதில் பெருமுதலீட்டாளர் மட்டும்தான். தனியாருக்கு ஏலம் விடும்போது ஒவ்வொரு இடத்திலும் ஏலம் விட்டால் அடிதடி ரகளை நடக்கும். இதனால் அரசே ஏற்று நடத்த முடிவு செய்தது. எங்க குரூப் மேஜராக செய்ததால், லிப்டிங் கான்ட்ராக்ட் எங்களுக்கு வழங்கப்பட்டது.''
''மணல் மூலமா அரசுக்கு கிடைக்கிற லாபம் எவ்வளவு?''
''2003-ம் ஆண்டில் மணல் குவாரிகளை அரசே ஏற்று நடத்தத் தொடங்கியபோது, அரசுக்கு கிடைத்த வருவாய் 27 கோடி. முதல் வருடத்திலேயே இது 100 கோடியாக உயர்ந்தது. அதன்பின் ஆண்டுக்கு 10 சதவிகிதம் அதிகரித்து வருகிறது. 2012-13-ம் ஆண்டில் அரசுக்கு இதுவரை கிடைத் திருக்கும் வருமானம் 190 கோடி.''
''மணல் தொழில் மூலம் உங்களுக்கு கிடைக்கிற லாபம் எவ்வளவு?''
''மணல் தொழிலில் எனக்கு நேரடியாகத் தொடர்பு இல்லை. மணல் எடுக்கப் பயன்படுத்தப்படுற மெஷின், லாரி எல்லாம் என்னுடையது. 500 பொக்லைன் மிஷின், 1,250 லாரிகள் எனக்கு இருக்கு. இதுக்கான வாடகை மட்டும் எனக்கு வருது. மணலில் வரும் லாபம், பங்குதாரர்களின் பங்கு போக, மீதிப் பணம் அறக்கட்டளைக்குக் கொடுக்கப்படுகிறது. வண்டி வாடகை பணத்தை மட்டும்தான் நான் எடுத்துக்கறேன். மணல்ல வர்ற பணம் அறக்கட்டளை மூலமா மக்களுக்கே கொடுத்துடுறோம். மணல் தொழில் மூலமாக அறக்கட்டளைக்கு ஆண்டுக்கு 100 கோடிக்கு குறையாமல் வரும். (சிறிது யோசித்தவர்) மாதம் 5 கோடி வீதம் 60 கோடி என எழுதிக்கோங்க. மணல் தொழில்ல எனக்கு பார்ட்னர்ஸ் 4 பேர். கோவையைச் சேர்ந்த பழனிச்சாமிதான் இப்போ தொழிலை கவனிச்சுக்கிறாரு.''
''அறக்கட்டளையோட சொத்து மதிப்பு எவ்வளவு?''
(கணக்கிடுகிறார்) ''இப்போதைய நிலவரப்படி மொத்தம் 1,250 கோடி வரும். அறக்கட்டளைக்கு வரும் பணத்தை என் குடும்பத்துக்கு எடுத்துக்கொள்ளவில்லை. ஆண்டுதோறும் அறக்கட்டளை மூலம் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறோம். முதலில் நான் சார்ந்த சமூகத்துக்கு மட்டும் இலவச உதவி தொகையை வழங்கினோம். 2008-ம் ஆண்டு முதல் கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு ஆகிய 4 மாவட்டங்களுக்கு வழங்கினோம். இப்போது தமிழகம் முழுவதும் உதவித்தொகையை வழங்கி வருகிறோம். நடப்பு ஆண்டில் மட்டும் 1 லட்சம் பேருக்கு 140 கோடி வரை கல்வி உதவித்தொகை வழங்க திட்டமிட்டு உள்ளோம். இதுவரை மொத்தம் மூன்றரை லட்சம் பேருக்கு 300 கோடி வரை வழங்கியுள்ளோம்.
என் லட்சியம் 10ஆயிரம் பேருக்காவது இலவசமாக உயர்நிலைக் கல்வியை அளிக்கும் வகையில் யுனிவர்சிட்டி அமைக்க வேண்டும் என்பதுதான். அதற்கான வேலைகள் நடந்து வருகிறது. நிதி கொஞ்சம் குறைவாக உள்ளது. தேவையான அளவு பணம் சேர்ந்தவுடன் யுனிவர்சிட்டி அமைக்கப்படும். கல்வி முழுமையாக இலவசம். கல்வியைப் பொறுத்தவரை 10 பைசாகூட காசாக்க விரும்பவில்லை. பொதுமக்களிடம் இருந்து எடுத்த பொதுச்சொத்தை பொதுமக்களுக்கே செலவு செய்கிறேன். கல்வி மட்டுமல்லாது மருத்துவம், குளம் தூர்வார என பல உதவிகளை செய்து வருகிறேன்.''
''மணலில் சம்பாதித்ததை மறைக்கத்தான் இந்த உதவியா?''
''அதை யாராலும் மறைக்க முடியாது. மறைக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. மறைக்காம பணத்தை நானே வைச்சுகிட்டா யார் என்னைக் கேட்க முடியும்? என் மனசாட்சிக்கு நான் செய்றேன். மணலில் கிடைக்கும் பணத்தை நானோ, என் குடும்பத்தினரோ எடுத்துக்கறதில்லை. அதை முழுமையாக அறக்கட்டளை மூலம் மக்களுக்கே செலவழிக்கிறேன். உண்மையைச் சொன்னா யாரும் நம்ப மாட்டார்கள். சமூகத்தில் மரியாதையே இல்லாத தொழிலாக மணல், சாராயத் தொழில் உள்ளிட்ட தொழில்கள் உள்ளன. நான் கொடுக்கணும்னு என்ன இருக்கு? பணம் இல்லாதவனுக்குத்தான் பணம் பெரிய விஷயம். என்னைப் பொறுத்தவரை மணல் மூலமா சேர்வது எல்லாமே எனக்குச் செல்லாத காசு. அதை மக்களுக்கு செலவழிக்கிறேன். எதிர்பாராம ஒரு வாய்ப்பு கிடைச்சது. பொதுச் சொத்தை எடுத்து வைத்துக்க வேண்டாங்கறதால் இந்த உதவியை செய்யறேன். சாதாரண விவசாய குடும்பத்துல பிறந்து இவ்வளவு செய்வேன் என எதிர்பார்க்கவில்லை.''
''மணல் அள்ளுவதால் நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்படுகிறதே... அதைப் பற்றி எல்லாம் கவலை இல்லையா?''
''ஆத்துல 10 அடிக்கு மணல் எடுக்கறாங்க. இல்லைனு சொல்லலை. பெரிய அளவுக்கு ஒரு மழை வந்தா குழி எல்லாம் சமமாகி சரியாகிடும். ஆறு வேணும்னா 4 அடி கீழே போயிருக்கும். ஆனா சமமாயிடும். நிலத்தடி நீர் பாதிக்கப்படுது... இல்லைனு சொல்லலை. மழை வந்து ஆத்துல வெள்ளம் வந்தா எந்தப் பிரச்னையும் இல்லை. பாலாறு போன்ற தண்ணீர் இல்லாத ஆத்துலதான் பிரச்னை. அங்கயும் செக் டேம் கட்டி மழை நீரை சேகரிக்கலாம்னு அரசுக்கு யோசனை சொல்லி இருக்கோம்.''
''அ.தி.மு.க., தி.மு.க. என்று எந்த ஆட்சி வந்தாலும் உங்களை ஏத்துக்கறாங்க. அப்படி என்ன ரகசியம்?''
''மணல் லிப்டிங் கான்ட்ராக்ட்ங்கறது தமிழகம் முழுவதும் பெரிய வியாபாரம். அதை நானெல்லாம் நடத்துவேன்னு எதிர்பார்க்கவே இல்லை. நாணயம், மரியாதையோட இந்தத் தொழிலைச் செய்யறேன். ரெண்டு பேரும் என்ன சொல்றாங்களோ அதைச் சரியாக செய்வதால் ஏத்துகிட்டாங்க.''  
''உதவித்தொகை கொடுக்கறீங்க... நிறைய உதவி செய்யறீங்க... அரசியலுக்கு வரப்போகிறீர்களா?''
(சிரிக்கிறார்) ''அரசியல் கூட்டங்கள் நடக்குற பக்கம்கூட போக விரும்பவில்லை. நம்ம சுபாவத்துக்கு அரசியல் சரிப்பட்டு வராது. இப்போ சேவை அரசியல் ஒரு சதவிகிதம்கூட இல்லை. நமக்கு அதெல்லாம் வேண்டாங்க...''
- சர்வசாதாரணமாகச் சொல்கிறார் ஆறுமுகச்சாமி.

Sunday 16 June 2013

மருந்து மாத்திரை வேண்டாம்... மனோதிடம் போதும்! நம்பிக்கை நட்சத்திரம் கோவை ஜெகதீஷ்!


'நாலு இடத்துக்குப் போயிட்டு வந்தால்தானே... நல்ல நண்பர்களோட சகவாசம் கிடைக்கும். இப்படியே வீட்டுக்குள்ள முடங்கிக்கிடந்தா..?’ என்று அந்தக் காலத்தில் பிள்ளைகளுக்கு போதிக்க ஒரு வசனம் உண்டு. ஆனால், இன்றோ, 'நாலு சுவருக்குள் நட்பைப் பெருக்கலாம்’ என்கிறார் கோவையைச் சேர்ந்த ஜெகதீஷ். 
கழுத்துக்கு கீழே அனைத்து உடல் உறுப்புகளும் செயலிழந்த நிலையில், வலது கை விரல்களின் அசைவை மட்டுமே வைத்து, கணினி அறிவால் இணையத்தில் அசத்தும் சாதனை இளைஞர் ஜெகதீசின் வயது 22.
கடுமையான உடல் சார்ந்த நெருக்கடிகளுக்கு இடையில், தமிழ் ஈழம் கோரிய மாணவர்களின் உண்ணாநிலைப் போராட்டத்தில் பங்கெடுத்து, அனைவரையும் வியக்கவைத்தவர். எந்த வேலை செய்வதாக இருந்தாலும் தனக்கே அடுத்தவர் உதவி நிச்சயம் தேவை என்ற சூழலில், உடல் வேதனையைப் பொருட்படுத்தாது, தேடிச் சென்று மற்றவர்களுக்கு உதவுகிறார். வியக்கவைக்கிறது இவரது தன்னம்பிக்கை.
ஆட்டோவில் கைக்குழந்தை போல படுத்தபடி பயணிக்கும் ஜெகதீஷ§க்கு பாட்டிதான் எல்லாம். ஜெகதீஷை, குழந்தை போல தூக்கி, அவருக்கென வடிவமைக்கப்பட்ட பிரத்யேக சக்கர நாற்காலியில் அமர்த்துகிறார். கை, கால்கள் எல்லாவற்றையும் பேடில் கட்டிவிடுகிறார்.  கழுத்து நிற்கத் தனியாக ஒரு பேட் கட்டிவிட்டால்தான் அவரால் உட்காரவே முடிகிறது. கோவை பெரியார் படிப்பகத்தில் ஜெகதீஷை சந்தித்தோம்.
''நான் பிறந்தப்ப நல்லாத்தான் இருந்தேனாம். ஆனா எல்லா குழந்தைகளும் போல நிக்க வேண்டிய நேரத்துல என்னால நிக்க முடியாமப் போச்சு. குழந்தைக்குரிய அந்தந்த நேரத்தில், நிற்க, நடக்க, ஓட கால்களுக்கான எந்த அசைவும்  என்னிடம் இல்லை. உடம்பில் போதிய வலுவில்லாமல் ரொம்பவே பிரச்னை. நிறைய டாக்டர்கள்கிட்ட கூட்டிட்டுப் போனாங்க. எனக்கு ஏழு வயசா இருக்கிறப்ப, ஆபரேஷன் பண்ணா சரியாகிடும்னு ஒரு டாக்டர் சொல்ல, நிறைய செலவழிச்சு ஆபரேஷன் பண்ணாங்களாம். ஆனா, அந்த ஆபரேஷன்ல ஏதோ தப்பாப் போனதால, என்னால் உட்காரக்கூட முடியாமப்போச்சு.  அதுக்கு அப்புறமும் நிறைய ட்ரீட்மென்ட்ஸ் எடுத்துக்கிட்டேன். மாத்திரை, மருந்துனு நிறைய செலவாச்சு. ஆனா, ஒண்ணும் பிரயோஜனம் இல்லை. உடம்பு இன்னும் மோசமானதுதான் மிச்சம். மூணு வருஷமா எந்த ட்ரீட்மென்ட்டும் எடுக்க வேணாம்னு முடிவு பண்னேன். நான் ஒரே பையன்கிறதால என் பெற்றோரும் என்னை வற்புறுத்தலை. இப்பதான் ரொம்பவே எனர்ஜியோட இருக்கேன். உடலில் வலு இருக்கோ இல்லியோ, மனசுல நல்ல தைரியம் இருக்கு.
இதுதான் என் நிலைமை. எனக்கு ஏற்பட்ட பாதிப்புக்கான காரணத்தை தெரிஞ்சுக்கக்கூட நான் விரும்பலை. நீங்களும் கேட்காதீங்க.  இதை மாத்த முடியாது. எதைப் பத்தியும் கவலைப்படாமல், நம்மால் சாதிக்க முடியும்னு தோணுச்சு. என்னை மாதிரியே இருக்கும்  குழந்தைகளோட பள்ளியில் படிச்சதால், எனக்கு என்னோட பலம் முழுமையாத் தெரிஞ்சது.
நிறையப் புத்தகங்கள் படிக்க ஆரம்பிச்சேன். செல்போன்ல கேம் விளையாடுவேன். கம்ப்யூட்டர் மேல் ஆசை வந்தது. முதல்ல கேம் விளையாடத்தான் கம்ப்யூட்டர் பயன்படுத்தினேன். அதைத் தாண்டி கம்ப்யூட்டர் மூலம் நிறைய சாதிக்க முடியும்னு தோணுச்சு. இன்டர்நெட் மூலம் நிறைய விஷயங்களை தெரிஞ்சுக்கிட்டேன். இப்போ இணையத்தில் உலக சினிமாக்களுக்கு விமர்சனம் எழுதிட்டு இருக்கேன். இன்னும் நிறைய விஷயங்களைக் கத்துக்கணும். கத்துக்கிட்டே இருக்கேன். நான் கத்துக்கிட்டதை சொல்லிக்கொடுத்துட்டும் இருக்கேன்.'' என்று உற்சாகத்துடன் பேசும் ஜெகதீஷ், கம்ப்யூட்ட்ர் மட்டுமே உலகம் என்று இல்லாமல், பாட்டியின் துணையுடன் வெளி இடங்களுக்கும் சென்று வருகிறார்.    
''நான் எங்கே போகணும்னு ஆசைப்பட்டாலும், என் பாட்டி அழைச்சிட்டுப் போவாங்க.  இந்த நாலு வருஷத்துல. வெளிய போற நேரம், வீட்ல என்னை யாராவது பார்க்க வர்ற நேரம் மட்டும்தான் சக்கர நாற்காலி. மத்த நேரம் எல்லாம் படுக்கைதான். படுத்தபடி, மவுஸ் பேட் மூலமா கம்ப்யூட்டர்ல வேலை செய்வேன்.  
பேஸ்புக், ட்விட்டர்ல எனக்கு ஆயிரத்துக்கும் அதிகமான ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்க. என் விமர்சனத்தையும், எழுத்துக்களையும் படிச்சு நிறைய ரசிகர்களைச் சம்பாதிச்சிருக்கேன். மாணவர் போராட்டத்தில மனப்பூர்வமாக் கலந்துக்கிட்டேன். அதுதொடர்பான என்னோட பதிவு, டெல்லி வரை எதிரொலிச்சது. இதெல்லாமே எனக்கு சந்தோஷத்தைத் தருது.
தமிழ் சினிமாவில் திரைக்கதையாளர் எனத் தனி இடத்தை உருவாக்க வேண்டும். அதை நோக்கி நண்பர்கள் இணைந்து முயற்சிக்கிறோம். அரசியல்ரீதியிலான போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளோம். இதற்கு எல்லாம் புத்தக வாசிப்புதான் காரணம். இன்னும் சாதிக்க வேண்டியது நிறைய இருக்கு. அதற்கு எனது உடல் பாதிப்புகள் தடையாக இருக்காது.' என்கிறார் ஜெகதீஷ்.
'நீ மாற்றுத்திறனாளியல்ல, பலரை மாற்றும் திறனாளி’ என்பது  அப்துல்கலாம் ஒரு நாள் ஜெகதீஷிடம் சொன்னாராம். அது நிஜம்!
ச.ஜெ.ரவி.

Saturday 25 May 2013

பழிவாங்குகிறதா தமிழக போலீஸ்? வெடித்தது பெங்களூரு.. அலறியது கோவை!


பெங்களூரில் வெடித்த குண்டு, கோவையை அதிரவைத்தி​ருக்கிறது. குண்டு வெடிப்புச் சம்பவத்துக்குக் காரணம் என்று, போலீஸார் கைதுசெய்திருக்கும் 11 பேரில் எட்டு பேர் கோவையைச் சேர்ந்தவர்கள். 
'இவர்கள் உண்மையான குற்றவாளிகள் அல்ல. பழிவாங்கும் நடவடிக்கையாகவே தமிழகக் காவல் துறை எங்களை சிக்கவைத்திருக்கிறது’ என்று, இஸ்லாமியக் கூட்டமைப்புகள் போராட்டம் நடத்திவருகிறது. சோதனை என்ற பெயரில் போலீஸார் மர்மப் பொருட்களை எங்களது வீடுகளில் வைத்துள்ளனர் என்ற குற்றச்சாட்டுக்களும் கைதானவர்களின் வீடுகளில் இருந்து கேட்க ஆரம்பித்துள்ளது.
குண்டு வெடிப்பு வழக்கில் கைதானவர்களின் உறவினர்களைச் சந்தித்துப் பேசினோம். 'வளையல்’ ஹக்கிம் என்பவரது மனைவி ரமலத் பானு, 'விசாரணை என்றுதான் எனது கணவரை போலீசார் அழைத்துச் சென்றனர். பிறகுதான் குண்டு வெடிப்பு வழக்கில் கைதுசெய்ததாகத் தெரியவந்தது. அவரைக் கைதுசெய்த மறுநாள் உள்ளூர் போலீஸார் எங்கள் வீட்டுக்கு வந்து சோதனை நடத்தினர். பெங்களூரு போலீசாரும் வீட்டுக்கு வந்து சோதனை செய்தனர். அவர்கள் கொண்டுவந்த பொருள் ஒன்றை எங்கள் வீட்டு பீரோவின் மேல் வைக்கமுயன்றனர். என்னுடைய அம்மா சுல்தான் பீவி, அதைப் பார்த்துட்டு சத்தம் போட்டாங்க. அதனால அந்தப் பொருளை வைக்காம எடுத்துட்டுப் போய்ட்டாங்க. அந்தக் கோபத்துல போலீஸ் எங்க அம்மாவைக் கீழே தள்ளிவிட்டுட்டாங்க. என் கணவர் மேல் எந்தத் தப்பும் இல்லை. உண்மையான குற்றவாளிகளைக் கைதுசெய்யட்டும். யாரோ செய்த தவறுக்கு நாங்க எதுக்கு பலிகடா ஆகணும்?'' என்று கலங்கினார்.
கிச்சன் புகாரி என்பவரின் மனைவி ஜெனிலாவைச் சந்தித்தோம். 'கடந்த 7-ம் தேதி நடந்த ஒரு மோதல் பிரச்னையில் இஸ்லாமியர்கள் கைதுசெய்யப்பட்டதுக்கு எதிராகப் போலீஸ் மீது என் கணவர் வழக்கு தொடர்ந்தார். அது போலீஸுக்குப் பிடிக்கவில்லை. அதற்குப் பழிவாங்கவே அவர் மீது பொய் வழக்குப் போட்டுள்ளனர். நெல்லை சென்றபோது அவரைக் கைதுசெய்து, நாய் சங்கிலியால் கட்டி எங்கள் வீட்டுக்குச் இழுத்து வந்தனர். அப்போது அவர், 'கரன்ட் ஷாக் கொடுத்து மிக மோசமாகச் சித்ரவதை செய்றாங்க. நான் உயிரோட வருவேனானு சந்தேகமாக இருக்கு. எனக்காக துவா செய்யுங்க’னு அழுதார்'' என்று வேதனையுடன் சொன்னார்.
சதாம் உசேனின் தாயார் பஷிரியா, 'எனது மகன் வேறு ஒரு மோதல் வழக்கில் கடந்த ஏப்ரல் 7-ம் தேதி கைதுசெய்யப்பட்டான். கோவை மத்தியச் சிறையில் இருந்தவனை இப்போ குண்டு வெடிப்பு வழக்கில் கைதுசெய்திருக்காங்க. என் மகனுக்கும் குண்டு வெடிப்புக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அவனைப் பார்த்து 50 நாட்கள் ஆகிவிட்டன. உயிரோடு இருக்கானா என்ற தகவல்கூட தெரியவில்லை'' என்றவர் மேற்கொண்டு பேச முடியாமல் அழ ஆரம்பித்தார்.
தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முஹம்மது ஹனிபா நம்மிடம், 'இங்கே கைதுசெய்யப்பட்ட யாரும் உண்மையான குற்றவாளிகள் இல்லை. தீவிரவாதிகள் வேரறுக்கப்பட வேண்டும், குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் எங்களுக்கு எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. எங்கே குண்டு வெடிப்பு  நடந்தாலும் அதற்கு முஸ்லிம்களைப் பலிகடா ஆக்குவது சரியல்ல. தமிழக போலீஸார் யாரைக் கைதுசெய்ய நினைக்கிறார்களோ, அவர்களை எல்லாம் பெங்களூரூ போலீஸ் மூலம் கைதுசெய்துள்ளனர். தமிழக உளவுத் துறையும், மத்திய உளவுத் துறையும் திட்டமிட்டே இதைச் செய்கிறது'' என்று குற்றம் சாட்டினார்.
கோவை மாநகர காவல் துறை உயர் அதிகாரி ஒருவரிடம் பேசினோம். 'பெங்களூரு குண்டு வெடிப்புச் சம்பவத்தைப் பொறுத்தவரை, கோவையில் கைதுசெய்யப்பட்ட யாருக்கும் பெரிய அளவில் தொடர்பு இல்லை. சிம் கார்டு வாங்கிக் கொடுத்தது உள்ளிட்ட சிறிய அளவிலான உதவிகளைத்தான் செய்துள்ளனர். கைதானவர்களின் வீடுகளில் வெடிபொருட்கள் எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை. இது, கர்நாடக மாநில போலீஸாரின் வழக்கு என்பதால், நாங்கள் ஆர்வம் காட்டவில்லை. கைது நடவடிக்கையால் கோவையில் எதுவும் பிரச்னை வரக் கூடாது என்பதற்காகப் பாதுகாப்பைப் பலப்படுத்தியுள்ளோம்'' என்றார்.
கோவையில் மீண்டும் மத ரீதியான மோதல் நடந்துவிடாமல் எச்சரிக்கையாக பார்த்துக்கொள்ள வேண்டியது காவல் துறையின் பொறுப்பு.
-ச.ஜெ.ரவி

இது தமிழின் மீதான இறுதி யுத்தம்! - டி.அருள் எழிலன்


தமிழ் மொழி இன்னும் வாழ்கிறது என்றால், அது அரசுப் பள்ளிகளின் தயவில்தான். முந்தைய தி.மு.க. அரசு சமச்சீர் கல்வியை அறிமுகம் செய்தபோது, அதில் இருந்து தப்பிக்க விரும்பிய பெற்றோர் சமச்சீர் கல்விக்குக் கட்டுப்படாத கல்வி முறையை நோக்கி ஓடினார்கள். தமிழை ஒரு மொழிப் பாடமாகக்கொண்டு தேர்வெழுதி 10-வது மற்றும் 2 தேர்வுகளில் உச்சபட்ச மதிப்பெண்கள் பெறும் மாணவர்களை 'மாநில முதல்வர்களாக’ அறிவிக்கும் நடைமுறை காரணமாகவே, லட்சக்கணக்கான மாணவர் களின் புத்தகப் பைகளில் தமிழ்ப் புத்தகம் இருக்கிறது. இப்படியெல்லாம் காலந்தோறும் அரசுப் பள்ளிகள் மட்டுமே தமிழைத் தாங்கிப் பிடித்துக்கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், எதிர்வரும் கல்வி ஆண்டிலிருந்து அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி அமல்படுத்தப்படும் என்று அறிவித்து அதிர்ச்சி கிளப்பிஇருக்கிறது தமிழக அரசு.


'இது தமிழ் மொழி மீது அரசாங்கம் தொடுத்திருக்கும் இறுதி யுத்தம்!’ என்று கல்வியாளர்களும் தமிழ் ஆர்வலர்களும் கொதிக்க, அரசுப் பள்ளி மாணவர்களின் பெற்றோர்களோ, 'இனி தங்கள் பிள்ளைகளுக்கும் ஆங்கில வழிக் கல்வி கிடைக்கும்’ என்று மகிழ்கிறார்கள்.
இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும்தான் ஏகப்பட்ட கல்வித்திட்டங்கள் அமலில் இருக் கின்றன. பெற்றோர்களிடம் நிலவும் ஆங்கில மோகத்தை அடிப்படையாக வைத்து, சுமார் ஏழு விதமான கல்விக் கொள்கைகள் கீழிருந்து மேலாக சாதி யைப் போல அடுக்கிக் கட்டப்பட்டுஉள்ளன. அரசுப் பள்ளி, மெட்ரிக் பள்ளி, மத்தியக் கல்வித் திட்டம், சர்வதேச உறைவிடப் பள்ளி எனப் பல்வேறு வகையான படிப்புகள். இதில் மேல் அடுக்கில் இருக்கும் மாணவர்கள் தனக்குக் கீழ் இருப்பவர்களை இழிவாகப் பார்க்கும் மனோபாவத்தை குழந்தைப் பருவத்திலேயே விதைத்துவிட்டிருக்கிறது நம் சமூக அமைப்பு.

தமிழகத்தின் மூத்த கல்வியாளர் எஸ்.எஸ்.ராஜகோபால், ''இந்திரா காந்தி நெருக்கடி நிலையை அறிவித்தபோது உருவானதுதான் இந்தக் குழப்பமான கல்வி முறை. 1978-ல் அமெரிக்க உதவியுடன்தான் நமது மதிய உணவுத் திட்டங்கள் நடைபெற்றன. அப்போதைய அமெரிக்க நெருக்கடி காரணமாக, மதிய உணவுத் திட்டங்களுக்கு மாற்றுவழியில் நிதி திரட்டவே முதல்வர் எம்.ஜி.ஆர். கல்வியைத் தனியார் வசம் ஒப்படைத்தார். அன்று தொடங்கி இன்று வரை புற்றீசல்போல தனியார் பள்ளிகள் முளைத்து தமிழகத்தில் கல்விச் சூழலையே நாசமாக்கிவிட்டார்கள். ஆங்கில மோகம் மட்டுமே தனியார் பள்ளிகள் கோலோச்சுவதற்குக் காரணம். இப்போது அரசும் ஆங்கிலக் கல்வியைக் காட்டி, தனது செல்வாக்கை உயர்த்த நினைக்கிறது. இது வெறும் கல்வி முறை சார்ந்த பிரச்னை மட்டுமல்ல, சமூகநீதி சார்ந்த விஷயம்'' என்கிறார்.

புற்றீசல்போலப் பெருகும் தனியார் பள்ளிகளைக் கட்டுப்படுத்தவும், தனியார் பள்ளிகள் மீதான மோகத்தைக் குறைக்கவுமே அரசுப் பள்ளிகளில் ஆங்கிலம் என்ற முடிவை அரசு எடுத்ததாகக் கூறுகிறார்கள்.

''பெரும்பாலான தனியார் பள்ளிகளில் பாடம் சொல்லிக்கொடுக்கும் ஆசிரியர்கள், தமிழில்தான் ஆங்கிலம் கற்றுக்கொடுக்கிறார்கள். ஏனெனில், அவர்களுக்கே ஆங்கில அறிவு அரைகுறையாகத்தான் இருக்கிறது. அதனால்தான் எல்.கே.ஜி. முதல் கல்லூரியின் இரண்டாம் ஆண்டு வரை சுமார் 16 ஆண்டுகள் ஆங்கிலத்தை ஒரு மொழிப் பாடமாகப் படித்தும் மாணவர்களுக்கு ஆங்கிலப் புலமை இல்லாமல்போகும் அவலம் நிலவுகிறது!'' என்று கற்றுக்கொடுத்தலில் உள்ள குறைபாட்டைச் சுட்டிக்காட்டுகிறார் சமூக ஆர்வலர் நலங்கிள்ளி.

ஆங்கில வழிக் கற்றலில் என்ன சிக்கல்கள் நேரும் என்பதைச் சுட்டிக்காட்டுகிறார் பேராசிரியர் கல்விமணி. ''நான் பள்ளி படித்த காலகட்டத்தில் 1957-ம் ஆண்டுவாக்கில் ஆறாம் வகுப்பில் இருந்து ஆங்கிலத்தை அறிமுகம்செய்தார்கள். ஆரம்பக் கல்வியைத் தமிழில் பயின்றுவிட்டு, ஆறாம் வகுப்பில் இருந்து ஆங்கிலம் கற்கத் துவங்கியபோது அது ஆரோக்கியமான கல்வி புகட்டலாக இருந்தது. ஆனால், இப்போது தாய்மொழியைக் கற்பதற்கு முன்பே ஆங்கிலத்தைக் கற்பிப்பது நிச்சயமாகக் கடுமையான பின்விளைவு களை உருவாக்கும். ஆங்கில மொழி படிப்பது வேறு, ஆங்கில வழியில் படிப்பது என்பது வேறு. இந்த வேறுபாட்டைப் பெற்றோர் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். பலரும் ஆங்கில வழியில் படித்தால்தான் ஆங்கிலத்தில் நன்றாகப் பேச முடியும் எனக் கருதுகின்றனர். ஆங்கில வழிக் கல்வி புகட்டும் வகுப்பறையில் வேதியியல், இயற்பியல் என அந்தந்தப் பாடங் களைப் புரியவைப்பதில்தான் ஆசிரியர்கள் கவனம் செலுத்துவார்களே தவிர, ஆங்கில இலக்கணத்தைக் கற்றுக் கொடுக்க மாட்டார்கள். 

மேலும், சில பொதுவான, பிரபலமான சொற்களை மட்டும் ஆங்கிலத்தில் சொல்லிக்கொடுப்பார்கள். ஒரு வினை அல்லது ஆராய்ச்சி சம்பந்தப்பட்ட அனைத்துச் சொற்களையும் கற்றுக்கொடுக்க மாட்டார்கள். ஆக, ஒரு மாணவனின் ஆய்வறிவு என்பது அந்த ஆசிரியர் சொல்லிக்கொடுத்த மிகச் சில வார்த்தை களுக்குள் அடங்கிவிடுகிறது.  

இன்றும் தமிழகத்தில் 80 விழுக்காடு மாணவர்கள் அரசுப் பள்ளிகளில்தான் படிக்கிறார்கள். 12-ம் வகுப்புப் பாடத்தை 11-ம் வகுப்பிலேயே கற்று மாவட்ட அளவில் முதல் இடம் பெறும் நாமக்கல் பள்ளிகளின் மாணவர் கள் சராசரியாக 1,180 மதிப்பெண் பெறுகிறார்கள். டிசம்பர் மாதம் முதலே அடுத்த கல்வி ஆண்டுக்கான பாடம் படிக்கும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் மாணவர்களோ மாவட்ட அளவில்  1,160 மதிப்பெண்கள் பெறுகிறார்கள். ஆனால், அந்தந்த பாடத்தை அந்தந்த வருடம் மட்டுமே பயிலும் அரசுப் பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவில் 1,145 மதிப்பெண்கள் பெறுகிறார்கள். அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் மற்றவர்களுக்கும் சராசரியாக 20 முதல் 40 வரை மதிப்பெண்கள் வித்தியாசப்படுகின்றன. 

இதில் நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் இடையிலான இடைவெளி, மாணவர்களின் வறுமைச் சூழல், வகுப்புச் சூழல் என எல்லாவற்றையும் கணக்கில்கொண்டு பார்க்கும்போது, அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மிகச் சிறப்பாகவே பயில்கிறார்கள். ஆக, இப்போதைய உடனடித் தேவை அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்தி கிராமப்புற மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டை அதிகரித்து சமநிலையை உண்டாக்கும் நடைமுறைகள்தான். இதைச் சாதித்தாலே அரசுப் பள்ளி மாணவர்கள் பல துறைகளில் பரிமளிப்பார்கள்.

ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம்  வகுப்பு வரை தமிழே பயிற்று மொழியாக இருக்க வேண்டும். இதுதான் வருங்காலச் சந்ததியினருக்கான சரியான பாதையாக இருக்க முடியும்!'' என்று முடித்தார் பேராசிரியர் கல்விமணி.

100 கோடி ரூபாய் செலவில் தமிழ்த் தாய்க்குச் சிலை வைக்கும் முதல்வர், அந்தத் தமிழ்த் தாயின் கையில் ஆங்கிலப் பாடப் புத்தகத்தைக் கொடுப்பது என்ன நியாயம்?